ஆகஸ்டுக்குள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் வேளாண் மாணவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல்
வேளாண் மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும், ஆகஸ்டு மாதத்திற்குள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.
பெங்களூரு,
வேளாண் மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும், ஆகஸ்டு மாதத்திற்குள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.
கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மதிப்பெண் பட்டியல்
கர்நாடகத்தில் கொரோனா பரவ தொடங்குவதற்கு முன்பு விவசாய கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் 90 சதவீதம் நடத்தி முடிக்கப்பட்டன. குழு உரையாடல், ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்தல் போன்றவை மட்டும் பாக்கி இருந்தது. கொரோனா காரணமாக மாணவர்களை ஒரே இடத்தில் சேர்க்க முடியாததால், இந்த பணிகள் ஆன்லைன் மூலமாக முடிக்கப்பட்டு உள்ளன.
இந்த மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும். எம்.எஸ்.சி. மற்றும் பி.எச்.டி. பயிலும் மாணவர்கள் தங்களின் ஆராய்ச்சி கட்டுரையை ஆகஸ்டு மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்கு பிற்கு இதற்கான தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். நான் பொறுப்பாளராக உள்ள கொப்பலில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வகத்தில் தினமும் 50 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்படுகின்றன. கொப்பல் மாவட்டத்தில் இதுவரை 211 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஊரடங்கு தீர்வல்ல
பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனம் மற்றும் ஆந்திராவின் எல்லை பகுதியில் இருந்து மக்கள் அதிக எண்ணிக்கையில் வருவதால், கொப்பலில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவுடன் மக்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதால் கொரோனா போய்விடாது. கொரோனாவை தடுக்க ஊரடங்கு தீர்வல்ல.
வாரத்தில் 2 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை. காநாடகத்தில் கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்துள்ளது. தற்போது வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது சரியான நடவடிக்கை. கிராமங்களில் பொதுமக்கள் தாமாக முன்வந்து, முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
கணக்கை கொடுப்போம்
கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு செய்த செலவுகளுக்கான கணக்கை கொடுப்போம். இந்த கணக்கை கொடுக்காமல் நாங்கள் ஓடிவிட மாட்டோம். கர்நாடகத்தில் கொரோனா பரவ, தப்லிக் ஜமாத் அமைப்பினர் தான் காரணம். அந்த அமைப்பினரை காங்கிரசார் ஆதரிக்கிறார்கள். இது காங்கிரஸ் கொரோனா என்று சொன்னாலும் தவறு இல்லை.
கொரோனாவை கட்டுப்படுத்த கர்நாடக அரசு நேர்மையான முறையில் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக பொய் குற்றச்சாட்டுகளை கூறுவதை விட்டுவிட்டு, கொரோனா தடுப்பு பணிகளில் அரசுடன் காங்கிரஸ் கைகோர்க்க வேண்டும்.
இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
Related Tags :
Next Story