போரிவிலியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ புகை மூட்டத்தால் தீயை அணைக்க ரோபோ களமிறக்கம்


போரிவிலியில் வணிக வளாகத்தில் பயங்கர தீ புகை மூட்டத்தால் தீயை அணைக்க ரோபோ களமிறக்கம்
x
தினத்தந்தி 12 July 2020 4:30 AM IST (Updated: 12 July 2020 3:40 AM IST)
t-max-icont-min-icon

போரிவிலியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால் தீணை அணைக்க ரோபோ களமிறக்கப்பட்டது.

மும்பை,

போரிவிலியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டத்தால் தீணை அணைக்க ரோபோ களமிறக்கப்பட்டது.

அதிகாலையில் தீ விபத்து

மும்பை போரிவிவி ரெயில் நிலையம் அருகே எஸ்.வி ரோடு பகுதியில் இந்திரபிரஸ்தா என்ற பெயரில் 3 மாடி வணிக வளாகம் உள்ளது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் வணிகவளாக கட்டிடத்தின் கீழ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. இந்த தீ கட்டிடத்தின் முதல் மாடிக்கு பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் 14 வாகனங்கள் மற்றும் 13 மெகா தண்ணீர் டேங்கர்களுடன் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் முதல் மாடியில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ரோபோ இறக்கம்

அப்போது தரைதளத்தில் பற்றிய தீயுடன் கரும்புகை அதிகளவில் வெளியேறியதால் தீயை அணைக்க வீரர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ரோபோவை பயன்படுத்தும் படி தீயணைப்பு படை சீனியர் அதிகாரி பிரபாத் உத்தரவிட்டார். இதன்பேரில் ரோபோவை தரை தளத்தில் இறக்கி விட்டு அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கரும்புகையை வெளியேற்ற பொக்லைன் எந்திரம் மூலம் தரை தளத்தில் இருந்த சுவரை சில அடி தூரம் இடித்து அப்புறப்படுத்தினர். இதன் மூலம் புகை வெளியேற்றப்பட்டது. தீயை மதியம் 12.30 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

யாரும் காயமடையவில்லை

இதையடுத்து அங்கு குளிர்விக்கும் பணி தொடர்ந்தது. இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அங்கிருந்த கடைகளில் இருந்த பொருட்கள் தீயில் கருகி நாசமானது. மேலும் ரெயில் நிலையத்தை யொட்டி வணிக வளாகம் இருந்ததால் அதன் அருகே இருந்த பிளாட்பாரம் நம்பர் 2-ல் இருந்து இயக்கப்பட இருந்த மின்சார ரெயில்கள் விரைவு வழித்தடத்திற்கு மாற்றப்பட்டன.

Next Story