பண்ருட்டி, வடலூர் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை சூறைக்காற்றில் தற்காலிக காய்கறி கடைகள் தரைமட்டமானது
பண்ருட்டி, வடலூர் பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் சூறைக்காற்றில் தற்காலிக காய்கறி கடைகள் தரைமட்டமானது.
பண்ருட்டி,
பண்ருட்டி, வடலூர் பகுதியில் நேற்று இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் சூறைக்காற்றில் தற்காலிக காய்கறி கடைகள் தரைமட்டமானது.
மழை
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று பண்ருட்டி பகுதியில் மதியம் 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் ¾ மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு சாரல் மழையாக தூறிக்கொண்டே இருந்தது.
வியாபாரிகள் கவலை
இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் சூறைக்காற்றுடன் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதில் சூறைக்காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பண்ருட்டி அடுத்த பணிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளின் தகர சீட்டுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. மேலும் ஒரு சில கடைகளின் தகர கொட்டாய் சரிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் கடைகளில் இருந்த காய்கறிகள் அனைத்தும் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.
பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
இதேபோல் வடலூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
Related Tags :
Next Story