முள்ளுக்குறிச்சி சந்தைக்கு பழங்கள் ஏற்றி வந்தபோது கொல்லிமலை மாற்றுப்பாதையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
முள்ளுக்குறிச்சி சந்தைக்கு பழங்கள் ஏற்றி வந்தபோது கொல்லிமலை மாற்றுப்பாதையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
சேந்தமங்கலம்,
முள்ளுக்குறிச்சி சந்தைக்கு பழங்கள் ஏற்றி வந்தபோது கொல்லிமலை மாற்றுப்பாதையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் 5 நாடு எனப்படும் பைல்நாடு, பெரக்கரை நாடு, சித்தூர்நாடு, எடப்புளி நாடு, திருப்புளி நாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ்மக்கள் அங்கு விளையும் பொருட்களை கொல்லிமலை மாற்றுப்பாதை வழியாக கொண்டு சென்று முள்ளுக்குறிச்சி பஸ் நிறுத்த சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனங்கள் மற்றும் மினி லாரிகளில் பலா, அன்னாசி, வாழைத்தார் மற்றும் இதர பழங்களை லோடு, லோடாக ஏற்றி பஸ் நிறுத்த சந்தைக்கு கொண்டு செல்ல கொல்லிமலை மாற்றுப்பாதை வழியாக சென்றனர். அப்போது மூலக்குறிச்சி வனத்துறை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த வனத்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தினர்.
வாக்குவாதம்
பின்னர் மலைவாழ் விவசாயிகளிடம் செங்கரை பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே மாற்றுப்பாதை வழியாக கொல்லிலைக்கு எந்த வாகனமும் செல்ல அனுமதி இல்லை என்றும் கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதைக்கேட்ட விவசாயிகள் மூலக்குறிச்சியில் இருந்து செங்கரைக்கு சுமார் 30 கி.மீட்டர் தொலைவு இருக்கும்போது மற்றவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் வாகனங்கள் தடுக்கப்பட்டதால் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
இதையறிந்த தேசிய விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனத்தலைவர் மெட்டாலா பெரியசாமி, மாநில பொது செயலாளர் செல்வபிரபு ஆகியோர் மலைவாழ் மக்களுடன் சேர்ந்து சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்லதுரையை அழைத்து வந்து விளைபொருட்கள் வீணாவதை தடுக்க வலியுறுத்தி சோதனைச்சாவடியில் இருந்த வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
காலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை 3 மணி நேரம் மாற்றுப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக வாகனங்கள் சென்றன.
Related Tags :
Next Story