விதை நெல்லை வாரி இறைத்து விவசாயிகள் போராட்டம்


விதை நெல்லை வாரி இறைத்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2020 6:50 AM IST (Updated: 12 July 2020 6:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விதை நெல்லை வாரி இறைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த கண்டியூர் வாய்க்காலில் தண்ணீர் வராததால் அடிபம்பில் தண்ணீர் பிடித்து நாற்றங்காலுக்கு விவசாயிகள் ஊற்றி வருகின்றனர். இது குறித்து விளக்கம் அளித்த பொதுப்பணித்துறையினர், கண்டியூர் வாய்க்கால் நாற்றங்கால் மேடான பகுதி. இது சம்பா பாசன பகுதி ஆகும். இருப்பினும் மேற்படி வாய்க்கால்களில் தண்ணீர் சுழற்சி முறையில் தான் தண்ணீர் வழங்க இயலும். தொடர்ச்சியாக வழங்க இயலாது. என தெரிவித்தனர்.

இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் சுகுமாறன் தலைமையில் தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அவர்கள் 2 மூட்டை விதை நெல்லையும் தங்களுடன் எடுத்து வந்தனர். பின்னர் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் செல்லும் வாயிலில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு, விதை நெல்லை வாரி இறைத்து கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் சிவக் குமார், தஞ்சை நகர கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

பின்னர் விவசாயிகள் ஒரு கோரிக்கை மனுவையும் அளித்தனர். அதில் கூறியிருப்ப தாவது:-

கல்லணையின் தலைமதகு பாசன பகுதிகளான கோனேரி ராஜபுரம் கிழக்கு, திருவாலம் பொழில் வாய்க்கால், சங்கார குனவாய்க்கால், திருத்துகால் வாய்க்கால், கண்டியூர் வாய்க்கால் ஆகிய பாசன பகுதிகளில் தண்ணீர் முழுவதுமாக சென்றடைய வில்லை. பம்புசெட் மூலம் மட்டுமே நாற்று விடப்பட்டு அந்த பகுதிகளில் நடவு செய்யப்பட்டு உள்ளது. ஆற்று தண்ணீரை நம்பி நாற்று விட்ட விவசாயிகளுக்கு தண்ணீர் போதுமானதாக இல்லாத காரணத்தால் அடிபம்பு மூலம் குடம் மற்றும் வாளி மூலம் தண்ணீர் ஊற்றி வருகிறோம்.

இந்த வாய்க்கால் பகுதியில் மொத்தம் 12 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு உள்ளன. இதில் குறுவைக்கு மட்டும் 2 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய 100 ஏக்கரில் நாற்றங்கால் விட்டுள்ளோம். விவசாயிகள் கடனுக்கு விதை நெல் வாங்கி, நாற்று விட்டும், சாகுபடி செய்ய முடியாத வேதனையில் உள்ளோம். இந்த பகுதியில் தூர்வாரும் பணிகளும் முறையாக நடைபெறவில்லை. எனவே குறுவை சாகுபடிக்கு முழுமையாக தண்ணீர் தர முடியுமா? என்பதை தெரிவிக்க வேண்டும்.

மேலும் இந்த பகுதி குறுவை பாசன பகுதி இல்லை, சம்பா பாசன பகுதி என தவறான தகவலை அறிவித்த பொதுப்பணித்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் திருச்சியில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பும் இதே போன்று விவசாயிகளை திரட்டி போராட்டத்தில் ஈடுபடு வோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story