கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


கொரோனா அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்படுகிறது - சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 12 July 2020 6:53 AM IST (Updated: 12 July 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கொரோனா நோய் அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயன்உள்ளதாக இருப்பதாக சுகாதாரதுறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திரு.வி.க. நகர், 

சென்னை அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட அத்திப்பட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நேற்று சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 5 ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தயாராகி வருகிறது. தற்போது ஆயிரம் படுக்கை வசதியுடன் ஒரு பிளாக் தயார் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் முதன்முறையாக அட்டைப்பெட்டிகள் மூலம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. கட்டுப்பாட்டு அறை மூலம் அனைத்து தளங்களும் கண்காணிக்கப்படுகிறது.

இந்திய மருத்துவத்தை அரசு நம்பவில்லை என்பது தவறான கருத்து. சித்த மருத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் மூலமும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதனை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று அளவு அதிகரிக்காமல் தடுக்க சித்த மருத்துவம் பயனுள்ளதாக இருக்கிறது.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மட்டுமே கொரோனா சிறப்பு மருந்துகள் தட்டுப்பாடுகள் இன்றி கிடைக்கிறது. சென்னை, மதுரை, நெல்லையில் பிளாஸ்மா வங்கி தொடங்கப்பட உள்ளது. தமிழகத்தில் பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதை மத்திய குழுவினர் பாராட்டினர்.

வேறு நோயால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப் பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாலும் கொரோனா இறப்பு கணக்கில்தான் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story