மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர்-லாரி பறிமுதல்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு


மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர்-லாரி பறிமுதல்; தப்பியோடிய 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 July 2020 7:46 AM IST (Updated: 12 July 2020 7:46 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை, நொய்யல் பகுதிகளில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர், லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ரெத்தினத்தாம்பட்டி பகுதி அருகே டிராக்டரில் செம்மண் கடத்திச்செல்வதாக, சத்தியமங்கலம் (பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் முத்துக்குமார் மற்றும் மருதூர் தெற்கு 1 கிராம நிர்வாக அலுவலர் தீபக் ஆகிய இருவரும் அங்கு சென்றுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர்கள் வருவதை பார்த்ததும் டிராக்டரை ஓட்டிச்சென்ற அதன் உரிமையாளரான குளித்தலை அருகே உள்ள முதலிகவுண்டனூரைச் சேர்ந்த ரவி (வயது 41), டிராக்டரை சாலையிலேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து அந்த டிராக்டரை கிராம நிர்வாக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய ரவியை தேடி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார், நொய்யல் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் திருச்சி மாவட்ட பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

அப்போது, மணல் கடத்தி வந்த லாரி டிரைவர் மண்மங்கலம் அருகே உள்ள பண்டுதகாரன்புதூரை சேர்ந்த கார்த்திக்(32), வேடிச்சிப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் லாரியிலிருந்து குதித்து தப்பி ஓடினர். இதையடுத்து மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய 2 பேரையும் தேடி வருகின்றனர். 

Next Story