தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
சாத்தான்குளம்,
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள்.
தந்தை-மகன் கொலை வழக்கு
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரும் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து இறந்தனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக நெல்லையில் முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது.
2-வது நாளாக...
நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் 2 குழுவாக பிரிந்து சாத்தான்குளம் சென்றனர். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். மேலும் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு 2 முறை சென்று விசாரணை மேற்கொண்டு, நெல்லைக்கு திரும்பினார்கள்.
இந்த நிலையில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் காலை முதல் மதியம் வரை முகாம் அலுவலகத்தில் தங்கி இருந்து தங்களது பணிகளை மேற்கொண்டனர். திடீரென்று மாலை 4 மணிக்கு சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் 6 பேர் கார்களில் சாத்தான்குளம் விரைந்தனர். 5.15 மணி அளவில் அவர்கள் அங்கு போய் சேர்ந்தனர்.
போலீஸ் நிலையத்தில் விசாரணை
முதலில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சென்றனர். அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) நாகராஜன், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாரி மற்றும் போலீசார் இருந்தனர். மேலும் போலீஸ் நிலையத்திற்கு வெளியே தடுப்புகள் அமைத்து யாரும் உள்ளே செல்ல முடியாதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் போலீஸ் நிலையத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள். மொட்டை மாடிக்கும் சென்று பார்த்தனர். விசாரணைக்கு இடையே சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்து சிறிது நேரம் செல்போனில் பேசி விட்டு மீண்டும் உள்ளே சென்றார்.
கோர்ட்டில் ஆய்வு
இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கிருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை 19-ந் தேதி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தது யார், எந்த புகாரின் அடிப்படையில் அவர்களை அழைத்து வந்தார்கள் என்று விசாரித்தனர். மேலும் கைது செய்யப்பட்டது குறித்து அவர்களின் குடும்பம், உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? போலீசாருக்கும், ஜெயராஜ் குடும்பத்துக்கும் முன்விரோதம் ஏதாவது இருந்ததா? என்பன உள்ளிட்டவை குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை இரவு 7.40 மணி வரை நீடித்தது.
பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் காரில் இருந்தவாரே பஜார் பகுதியில் இருந்த பென்னிக்ஸ் கடையை பார்வையிட்டு சென்றனர். தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சாத்தான்குளம் கோர்ட்டிற்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் கள ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கார்களில் நெல்லைக்கு புறப்பட்டு சென்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தீவிரம் அடைந்து உள்ளதால் இந்த வழக்கு சூடுபிடித்து உள்ளது.
Related Tags :
Next Story