கொரோனா பணி சவாலாக உள்ளது: பொதுமக்கள்-போலீசார் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் குமரி மாவட்ட புதிய சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பேட்டி
போலீசார்-பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
கொரோனா பணி சவாலாக உள்ளது, போலீசார்-பொதுமக்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.
புதிய சூப்பிரண்டு பொறுப்பேற்றார்
குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீநாத் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். பின்னர் இந்த உத்தரவு திடீரென ரத்து செய்யப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் பத்ரி நாராயணன், குமரி மாவட்டத்தின் புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். குமரி மாவட்டத்தின் 51-வது போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் முன்னாள் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பேட்டி
இதையடுத்து குமரி மாவட்ட புதிய சூப்பிரண்டு பத்ரி நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம் கல்வி மற்றும் நிர்வாகத்தில் சிறந்து விளங்குகிறது. தற்போது கொரோனா பணி நாம் அனைவருக்கும் சவாலாக உள்ளது. போலீசார் பொது மக்களுக்கு உதவிடும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
பொதுமக்கள், போலீஸ் இடையே நல்லுறவு இருக்க வேண்டும். காவல்துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து சக போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். பொதுமக்கள் தங்களது குறைகளை தைரியமாக தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பணியாற்றிய இடம்
போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணிக்கு தேர்வானார். நாகப்பட்டினம், திண்டுக்கல்லில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த அவர் சென்னை மாமல்லபுரத்திலும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். பதவி உயர்வு மூலம் கடந்த ஆண்டு திருப்பூர் மாநகர துணை கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது குமரி மாவட்டத்தில் புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுள்ளார்.
இதேபோல் நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் பதவி உயர்வு பெற்று, சென்னை அண்ணாநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story