முழு ஊரடங்கு: 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்


முழு ஊரடங்கு: 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
x
தினத்தந்தி 13 July 2020 4:30 AM IST (Updated: 13 July 2020 12:21 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.

முழு ஊரடங்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் போலீசாரின் பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சந்திப்பில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கினார்.

2 ஆயிரம் போலீசார்

பின்னர் அவர் கூறியதாவது:-

முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது. மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தேவையில்லாமல் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி நகரில் 35 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 120 இடங்களில் சுமார் 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போன்று போலீசாருக்கும் தினமும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அனைவரும் 100 சதவீதம் முக கவசம் அணிய வேண்டும். கையுறை அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. போலீசில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story