தூத்துக்குடியில் இருந்து கோவை, ஐதராபாத்துக்கு விமானம் இயக்க வேண்டும் இந்திய வர்த்தக தொழிற்சங்கம் வலியுறுத்தல்
தூத்துக்குடியில் இருந்து கோவை, ஐதராபாத்துக்கு விமானம் இயக்க வேண்டும் என்று இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இருந்து கோவை, ஐதராபாத்துக்கு விமானம் இயக்க வேண்டும் என்று இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட இந்திய வர்த்தக தொழிற்சங்க செயலாளர் கோடீசுவரன், விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
விமான நிலையம்
தூத்துக்குடி தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் ஆகும். மத்திய அரசு வ.உ.சி. துறைமுகத்தில் வெளித்துறைமுகம் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. தமிழக அரசு மதுரை-தூத்துக்குடி தொழில் வழித்தடம் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதனால் பல தொழிற்சாலைகள் வர உள்ளன. ஆகையால் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைவு படுத்த வேண்டும். விமான நிலைய ஓடுதளத்தை பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் 3 ஆயிரத்து 600 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டதாக மாற்ற வேண்டும். பயணிகள் வரவேற்பு அறை, காத்திருப்போர் அறையை விரிவுபடுத்த வேண்டும். விமான நிலையத்துக்கு செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும்.
விமான சேவை
தூத்துக்குடியில் இருந்து புதிதாக ஐதராபாத், கோவை, மும்பை, கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கவும், தூத்துக்குடியில் இருந்து கொழும்பு, மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு விமானம் இயக்க வேண்டும். அதே நேரத்தில் இரவு நேர விமானம் சேவை தொடங்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை செல்லும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் ஆவர். ஆகையால் தூத்துக்குடி விமான நிலையம் மேம்படுத்தப்படும் போது, விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானம் இயக்க முன்வருவார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story