அம்பை பகுதியில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா


அம்பை பகுதியில் ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 July 2020 3:45 AM IST (Updated: 13 July 2020 1:16 AM IST)
t-max-icont-min-icon

அம்பை பகுதியில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அம்பை, 

அம்பை பகுதியில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பஸ் கண்டக்டர்

நெல்லை மாவட்டத்தில் அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி அங்கு 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை மதியம் வரை மட்டும் கடைகளை திறந்து வைக்குமாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் அம்பை பகுதியில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

அம்பை இல்லத்தார் தெருவில் வசித்து வரும் 51 வயது அரசு பஸ் கண்டக்டர், மற்றும் இவருடைய மகனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சிவன்கல் தெருவில் உள்ள கணவன், மனைவிக்கும், புதுக்கிராமம் தெருவில் வசிக்கும் சென்னையில் இருந்து வந்த 54 வயது பெண்ணுக்கும் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இவர் தனியார் ஆஸ்பத்திரியிலும், மற்ற 4 பேர் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர்.

அம்பை அருகே உள்ள மன்னார்கோவில் சன்னதி தெருவை சேர்ந்த தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 50 வயது நபர், இவருடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் இரண்டரை வயது பேரன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதையொட்டி அம்பை யூனியன் ஆணையாளர்கள் சுசீலா, சங்கரகுமார் ஆகியோர் மன்னார்கோவிலுக்கு சென்று சுகாதார பணிகளை முடுக்கி விட்டனர்.

கல்லிடைக்குறிச்சி

இதுதவிர அம்பையை அடுத்த கல்லிடைகுறிச்சியில் மேல்முகநாடார் தெருவில் 2 பெண்கள், மேட்டுத்தெருவில் 63 வயது பெண், அகஸ்தியர் கோவில் கீழத்தெருவில் 4 வயது பெண் குழந்தை மற்றும் 70 வயது முதியவர், 63 வயது பெண், குத்துக்கல் தெருவில் வசிக்கும் 74 வயது 64 வயது சகோதரர்கள், கரந்தை பிள்ளைமார் தெருவில் 48 வயது ஆண், ஆத்தியடி தெருவில் 22 வயது பெண் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் அனைவரும் நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

சேரன்மாதேவி

சேரன்மகாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் வீரவநல்லூர் மற்றும் பத்தமடையை சேர்ந்த பணியாளர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Next Story