கர்நாடகத்தில் அதிகரிக்கும் சாவு எண்ணிக்கை கொரோனாவுக்கு மேலும் 71 பேர் பலி புதிதாக 2,627 பேருக்கு தொற்று


கர்நாடகத்தில் அதிகரிக்கும் சாவு எண்ணிக்கை கொரோனாவுக்கு மேலும் 71 பேர் பலி புதிதாக 2,627 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 13 July 2020 4:00 AM IST (Updated: 13 July 2020 2:44 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சாவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 71 பேர் பலியாகியுள்ளனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனாவுக்கு சாவு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 71 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 2,627 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கர்நாடகமும் சேர்ந்துள்ளது

நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக சுமார் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மராட்டியம், டெல்லி, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வரும் மாநிலங்களின் வரிசையில் கர்நாடகமும் சேர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் கொரோனா ருத்ரதாண்டவமாடி வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 843 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2,627 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் ஒரே நாளில் 1,525 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் கொரோனாவுக்கு இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு இதுவரை இல்லாத புதிய உச்சமாக 71 பேர் பலியாகியுள்ளனர்.

ஊரடங்கு அமல்

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு வாரம் ஊரடங்கை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் நேற்றைய பாதிப்பு குறித்து சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 35 ஆயிரத்து 599 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று புதிதாக 2,627 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 409 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 693 பேர் அடங்குவர்.

பெங்களூருவில் 1,525 பேர்

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,525 பேர், தட்சிண கன்னடாவில் 196 பேர், தார்வாரில் 129 பேர், யாதகிரியில் 120 பேர், கலபுரகியில் 79 பேர், பல்லாரியில் 63 பேர், பீதரில் 62 பேர், ராய்ச்சூரில் 48 பேர், உடுப்பியில் 4 பேர், மைசூருவில் 42 பேர், சிவமொக்காவில் 42 பேர், சிக்பள்ளாப்பூரில் 39 பேர், ஹாசனில் 31 பேர், கொப்பலில் 27 பேர், துமகூருவில் 26 பேர், கோலாரில் 24 பேர், தாவணகெரேயில் 20 பேர், பெங்களூரு புறநகரில் 19 பேர், குடகில் 15 பேர், கதக்கில் 14 பேர், சாம்ராஜ்நகரில் 13 பேர், உத்தரகன்னடா, ஹாவேரியில் தலா 12 பேர், சிக்கமகளூருவில் 10 பேர், பாகல்கோட்டையில் 7 பேர், மண்டியாவில் 4 பேர், ராமநகரில் 3 பேர், பெலகாவியில் 2 பேர் உள்ளனர். விஜயாப்புரா, சித்ரதுர்காவில் நேற்று யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கொரோனாவுக்கு நேற்று 71 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெங்களூருவில் 46 பேர், பாகல்கோட்டையில் 2 பேர், தாவணகெரேயில் 3 பேர், மைசூருவில் 3 பேர், விஜயாப்புராவில் ஒருவர், ஹாசனில் 3 பேர், பெலகாவியில் 3 பேர், ஹாவேரியில் 2 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், தார்வாரில் ஒருவர், கொப்பலில் ஒருவர், சாம்ராஜ்நகரில் ஒருவர், துமகூருவில் ஒருவர் உள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 688 ஆக அதிகரித்துள்ளது.

பரிசோதனை

கர்நாடகத்தில் இதுவரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 74 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 20 ஆயிரத்து 50 மாதிரிகள் அடங்கும். 76 ஆயிரத்து 791 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 22 ஆயிரத்து 746 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 532 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெங்களூருவில் 314 பேர் அடங்குவர்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story