விருத்தாசலம் அருகே ஆட்டோ டிரைவர் கொரோனாவுக்கு பலி சிதம்பரம் பெண் டாக்டர் உள்பட மேலும் 16 பேருக்கு தொற்று உறுதி
விருத்தாசலம் அருகே ஆட்டோ டிரைவர் கொரோனாவுக்கு பலியானார். சிதம்பரம் பெண் டாக்டர் உள்பட மேலும் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்,
விருத்தாசலம் அருகே ஆட்டோ டிரைவர் கொரோனாவுக்கு பலியானார். சிதம்பரம் பெண் டாக்டர் உள்பட மேலும் 16 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோ டிரைவர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விருத்தாசலம் பகுதியில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. நோய்தொற்று உறுதியானவர்களை சுகாதாரத் துறையினர் மீட்டு கடலூர் மற்றும் சிதம்பரம் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள வீராரெட்டிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க ஆட்டோ டிரைவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து அவர் சிதம்பரம் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது கொரோனா நோய்தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை விருத்தாசலம் வருவாய்த்துறையினர் கண்டறிந்து அவர்களை தனிமை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 16 பேருக்கு
இதற்கிடையே நேற்று மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்று புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் சிதம்பரம் பகுதியை சேர்ந்த தனியார் பெண் மருத்துவர், லேப் டெக்னீஷியன், சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த அண்ணாகிராமம் பகுதியை சேர்ந்த பெண் செவிலியர் ஆகிய 3 பேர், சென்னையில் இருந்து வந்த மங்கலம்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர், நோய் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த விருத்தாசலம், கம்மாபுரம், கடலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர், பண்ருட்டியை சேர்ந்த நாட்டுமருந்து கடை வியாபாரிகள் 2 பேர், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சிதம்பரம் பகுதியை சேர்ந்த 5 பேர், விருத்தாசலம் பகுதியைசேர்ந்த 2 பேர் என மொத்தம் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,521 ஆக அதிகரித்துள்ளது.
16 பேர் வீடு திரும்பினர்
இது தவிர கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த 16 பேர் நேற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட மற்றும் உறுதிசெய்யப்பட்ட 365 பேர் பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனை மற்றும் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 51 பேர் பிறமாவட்டங்களிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரத்து 404 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 1,521 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்னும் 1,210 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.
Related Tags :
Next Story