விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் சாலைகள் வெறிச்சோடின
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி இருந்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கி இருந்தனர். இதனால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
கலங்கடிக்கும் கொரோனா
கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனாவுக்கு எதிரோக உலகமே போரிட்டு கொண்டு இருக்கிறது. உயிர்கொல்லி தொற்றான இதற்கென்று இதுவரைக்கும் மருந்தே கண்டு பிடிக்காத நிலையில், ஊரடங்கு மட்டுமே இதற்கான ஒரு மருந்தாக பார்க்கப்பட்டு வருகிறது. ஏனெனில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்ப்பதன் மூலமாக கொரோனா பரவலின் சங்கிலியை உடைத்து ஓரளவுக்கு தொற்று பரவலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் முடியும். இவ்வாறு இருந்தும் கொரோனா தொற்று மக்களை இன்னும் கலங்கடித்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் தொடங்கிய ஊரடங்கு தற்போது வரையில் அமலில் உள்ளது. அதாவது 6-வது கட்ட ஊரடங்கில் இருந்தாலும், சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொலைகார கொரோனாவின் சங்கிலி தொடரை துண்டிக்க ஒரு சிறு முயற்சியாக, இந்த மாதத்தில்(ஜூலை) வரும் 4 ஞாயிற்றுக்கிழமையும் தளர்வு இல்லாமல் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதனடிப்படையில் 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது.
வெறிச்சோடிய சாலைகள்
கொரோனா பரவல் அதிவேகம் எடுத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து இருந்தனர். மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருந்தனர். இதனால் விழுப்புரம் நகரில் எப்போதும் பரபரப்புடன் காணப்படும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தது. தேவையின்றி சாலையில் சுற்றித்திரிபவர்களை கண்காணிக்கும் விதமாக போலீசார் நகரில் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார். இதில் விழுப்புரம் நகரில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 100-க்கும் மேற்பட்டவர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
செஞ்சி, திண்டிவனம்
செஞ்சியில் மருந்து கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளையும் அடைத்து வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். நாட்டார் மங்கலத்திலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அவசியமின்றி சாலையில் வாகனங்களில் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர்.
திண்டிவனத்தில் பால் மற்றும் மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. சென்னை, புதுச்சேரி, திருச்சி, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மற்றும் மேம்பாலத்தின் நான்கு முனை சந்திப்பு பகுதிகள் என்று அனைத்து பகுதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர். இதற்கிடையே திண்டிவனம் பகுதியில் இன்று மற்றும் நாளை(செவ்வாய்க்கிழமை) கடைகள் அனைத்தையும் அடைக்க வியாபாரிகள் தரப்பில் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் முழு பொது முடக்கம் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி நகர பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
இருப்பினும் மருந்தகம், பால் பூத் ஆகியவை வழக்கம்போல் இயங்கின. கடைகள் அடைக்கப்பட்டதால் கள்ளக்குறிச்சி நகரத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் சிலர் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
ரிஷிவந்தியம், பகண்டை கூட்டுரோடு பகுதியில் ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு மண்டல பொறுப்பாளர் பரந்தாமன், சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன், வீரன், வாணாபுரம் ஊராட்சி செயலாளர் சக்திவேல், கிராம உதவியாளர் சங்கர் மற்றும் அதிகாரிகள் பகண்டை கூட்டுரோடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறியது தொடர்பாக 58 பேரிடம் இருந்து தலா 100 அபராதமாக வசூலித்தனர்.
இதேபோல் சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பொதுமக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கினர். இதன் காரணமாக அந்தந்த பகுதியில் உள்ள சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story