சாலை விபத்துகளை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்; போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


சாலை விபத்துகளை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்; போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 13 July 2020 10:56 AM IST (Updated: 13 July 2020 10:56 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறினார்.

கோவை,

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 51 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சுஜித்குமார் மதுரை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய அருளரசு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மதியம் 3 மணியளவில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, கோவை அமைதியான மாவட்டம் ஆகும். எனவே குற்றங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும், சாலை விபத்துகளை தடுப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்துவேன். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டுக்கு போலீஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு அருளரசுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

புதிய போலீஸ் சூப்பிரண்டு அருளரசு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர். பி.இ.என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் எம்.பி.ஏ. முடித்து 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை ஈரோடு, கிருஷ்ணகிரி, பெருந்துறையில் உள்ள கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றினார்.

அதைத்தொடர்ந்து 2001-ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று துணை சூப்பிரண்டாக போலீஸ் பணியில் சேர்ந்தார். தர்மபுரியில் 6 மாதம் பயிற்சிக்கு பின்னர் ஓசூர், குடியாத்தம், பண்ருட்டி உட்கோட்டங்களில் துணை சூப்பிரண்டாக பணியாற்றினார்.

அதன்பின்னர் 2009-ம் ஆண்டு கூடுதல் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று மாநில உளவுபிரிவில் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று அதே உளவுபிரிவில் 2017-ம் ஆண்டு வரை பணியாற்றினார். அதே ஆண்டு மே மாதம் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்று பணியாற்றி வந்த அவர் தற்போது கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கடந்த 2015-ம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்ச்சி பெற்று ஐ.பி.எஸ். ஆனார். கடந்த 2005-ம் ஆண்டு வடமாநிலத்தில் உள்ள பவாரியா கொள்ளைக்கூட்டத்தை கண்டுபிடிக்கும் குழுவில் இடம் பெற்று விருது பெற்றுள்ளார். 2013-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் தீவிரவாத குழுவை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு முதல்-அமைச்சர் விருது மற்றும் ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப்பரிசையும் பெற்றுள்ளார்.

Next Story