வடபழஞ்சி தொழில்நுட்ப வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்


வடபழஞ்சி தொழில்நுட்ப வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 13 July 2020 11:11 AM IST (Updated: 13 July 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

வடபழஞ்சி தொழில்நுட்பவளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது.

நாகமலைபுதுக்கோட்டை,

மதுரை மாவட்டம் வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப கட்டிட வளாகத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது. அதனை கலெக்டர் வினய் தலைமையில், மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலையில் அமைச்சர் உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மதுரையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ராஜாஜி மருத்துவமனையில் 1,400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மூச்சுத்திணறல் போன்ற நிலையில் வருகின்ற போது அவர்களை காப்பாற்றுவதற்காக அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு வருகிறது. பிற அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 850 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. இவை அனைத்தும் தீவிர சிகிச்சைக்காக உள்ளது. இவைகளை தவிர 21 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக வடபழஞ்சி தொழில் நுட்ப பூங்கா வளாக கட்டிடத்தில் சுமார் 1,000 படுக்கைகள் கொண்ட முழுமையான கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்படுகிறது. அதற்காக படுக்கைகள் உருவாக்குவது, மின்விசிறி, விளக்குகள் அமைப்பது, போதுமான கழிப்பறை வசதிகள் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 3 நாட்களாக நோய் தொற்று எண்ணிக்கை குறைவாக வருவது நமக்கு சற்று ஆறுதலாக உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல கிராமப் பகுதிகளிலும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. ஊரடங்கு நல்ல பலனை தந்து இருக்கிறது. மக்களின் ஒத்துழைப்பு இருப்பதால் நல்ல பலன் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், சரவணன் எம்.எல்.ஏ., துணை இயக்குனர் சுகாதாரம் பிரியாராஜ், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் இந்துமதி, மேற்கு தாசில்தார் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story