மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் 21-ந் தேதி தொடக்கம்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் 21-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 13 July 2020 11:17 AM IST (Updated: 13 July 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சுந்தரேசுவரருக்கு நடைபெறும் திருவிழாவில் சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. அதே போன்று மீனாட்சி அம்மனுக்கு ஆடி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி ஆகிய மாதங்களில் நடைபெறும் விழாக்கள் சிறப்புக்குரியது.

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் திருவிழாவான ஆடி முளைக்கொட்டு உற்சவம் வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஆடிப்பட்டம் தேடி விதை என்பதால் விவசாயிகள், ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாய பணிகளை மேற்கொள்வர். விளை நிலைங்களில் பயிர்கள் அமோகமாக விளையும் வகையில் முளைக்கொட்டு வைத்து இறைவனை வழிபடுவார்கள். அந்த விழாதான் மீனாட்சி அம்மனுக்கு முளைக்கொட்டு விழாவாக நடத்தப்படுகிறது.

தற்போது உலகை அச்சுறுத்தும் கொரோனா காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் கோவில் தினமும் திறக்கப்பட்டு ஆகம விதிப்படி 6 கால பூஜைகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே வைகாசி வசந்த உற்சவ விழா, ஆனி திருவிழா மீனாட்சி அம்மன் கோவில் உள்ளேயே நடைபெற்றது. இந்த நிலையில் மீனாட்சி அம்மனுக்கு தனியாக நடத்தப்படும் ஆடி முளைக்கொட்டு உற்சவ விழா வருகிற 21-ந் தேதி மீனாட்சி அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்திகளுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக வருகிற 24-ந் தேதி ஆடிப்பூரம் விழா நடைபெறும். அன்றைய தினம் மூலவர் மற்றும் உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறும். மேலும் 27-ந் தேதி பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஆடி வீதியில் வலம் வருவார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த திருவிழாவை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோவிலுக்கு உள்ளேயே நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கோவில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story