பலியான இன்ஸ்பெக்டருக்கு மரியாதை: கொரோனா தடுப்பு பணியில் போலீசார் கவனமாக செயல்பட வேண்டும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் வேண்டுகோள்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் கவனமாக செயல்பட வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நெல்லை,
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசார் கவனமாக செயல்பட வேண்டும் என்று நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்ஸ்பெக்டருக்கு மரியாதை
நெல்லை மாநகர ஆயுதப்படை பிரிவில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சாது சிதம்பரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்தார். இதையொட்டி அவரது உருவ படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் மற்றும் துணை கமிஷனர் (சட்டம் ஒழுங்கு) சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மரியாதை செலுத்தினர்.
கவனமாக செயல்பட வேண்டும்
இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் தீபக் டாமோர் பேசுகையில், “நெல்லை மாநகர போலீசில் 27 பேருக்கு கொரோனா வந்துள்ளது. 4 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு சாது சிதம்பரம் இறந்து விட்டார். இது போலீசாருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது குடும்பத்தில் ஏற்கனவே மருமகன் கொரோனாவுக்கு இறந்து விட்டார். இது 2-வது இழப்பு ஆகும். சாது சிதம்பரம் குடும்பத்துக்கு காவல்துறை உதவியாக இருக்கும்.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் ஒவ்வொரு அதிகாரி, போலீசாரும் கவனமாக செயல்பட வேண்டும். பணியில் இருக்கும் போது நல்லமுறையில் வேலை செய்வதுடன், விழிப்போடும் செயல்பட வேண்டும். முக கவசம், கையுறை உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்” என்றார்.
Related Tags :
Next Story