முள்ளோடை எல்லையில் போலீசார் கெடுபிடி கடலூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
முள்ளோடை எல்லையில் போலீசாரின் கெடுபிடி காரணமாக கடலூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
பாகூர்,
முள்ளோடை எல்லையில் போலீசாரின் கெடுபிடி காரணமாக கடலூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
மாநில எல்லைகள் மூடல்
புதுவை மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று வரை 1,450-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொற்று பரவலை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளான முள்ளோடை, கோரிமேடு, கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு ஆகிய நுழைவு வாயில்கள் மூட உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் எல்லைகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிக்கு வரும் வெளிமாநிலத்தினர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். இந்த கெடுபிடிகள் அனைத்தும் நாளடைவில் தளர்ந்துபோனது. இதனால் கடந்த சில நாட்களாக எந்தவித கட்டுப்பாடுமின்றி புதுச்சேரிக்கு வந்து சென்றனர். இதுபற்றி வந்த புகாரின் பேரில் எல்லைகளில் கெடு பிடிகளை அதிகரிக்க போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
அதன்பேரில் முள்ளோடை நுழைவு வாயிலில் கிருமாம்பாக்கம் போலீசார், தன்னார்வலர்கள், தனியார் நிறுவன காவலாளிகள் நேற்று காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூரில் இருந்து புதுவைக்கு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பாஸ் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த அடையாள அட்டையை கேட்டு கெடுபிடி காட்டினர்.
இந்த ஆவணங்கள் வைத்திருந்தவர்கள் மட்டும், சோதனைக்கு பின் புதுவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆவணங்கள் இல்லாதவர்கள் கடலூருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். சரக்கு வாகனங்கள் மற்றும் புதுவையில் பணியாற்றும் ஊழியர்கள் ஆய்வுக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story