ஒதியஞ்சாலை சுகாதார நலவழி மையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை அமைச்சருடன் சிவா எம்.எல்.ஏ. வாக்குவாதம்
ஒதியஞ்சாலை நலவழி மையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது.
புதுச்சேரி,
ஒதியஞ்சாலை நலவழி மையம் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாம் குறித்து தாமதமாக தகவல் தெரிவித்தது குறித்து அமைச்சருடன் சிவா எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பரிசோதனை
புதுச்சேரியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவ பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு சுகாதார துறை பரிந்துரைத்தது. அதன்படி பொதுமக்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அரசு நடவடிக்கை மேற்கொண்டது. கிராமப்புறங்களில் நடமாடும் பரிசோதனைக் கூடமும், தொகுதிகளில் முக்கிய இடங்களிலும் இந்த பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஒதியஞ்சாலை சுகாதார நலவழி மையம் சார்பில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள ஜவகர் பால் பவன் வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தொடங்கி வைத்தார். இதில் அன்பழகன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வாக்குவாதம்
முகாமில் உப்பளம், உருளையன்பேட்டை தொகுதிகளை சேர்ந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. நகராட்சி ஊழியர்களும் கொரோனா பரிசோதனைக்கு வந்து இருந்தனர்.
இந்த முகாம் குறித்த தகவல் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சிவாவுக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முகாம் நடந்த இடத்துக்கு வந்த எனது தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம் குறித்து முறைப்படி தனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் தனியார் திருமண மண்டபம் அல்லது வசதியான ஒரு இடத்தில் முகாமை ஏற்பாடு செய்து இருப்போம். முகாம் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்தவும் இல்லை. சுகாதார துறையினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் என்று கேட்டு அங்கிருந்த அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்குசிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிவா எம்.எல்.ஏ.வை அமைச்சர் சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
Related Tags :
Next Story