குறைந்த நபர்களே வருகை: கொரோனா பரிசோதனை முகாம் குறித்து பொதுமக்களுக்கு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை


குறைந்த நபர்களே வருகை: கொரோனா பரிசோதனை முகாம் குறித்து பொதுமக்களுக்கு சரியாக தகவல் தெரிவிக்கவில்லை
x
தினத்தந்தி 14 July 2020 4:46 AM IST (Updated: 14 July 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

சத்துவாச்சாரியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் குறைந்த நபர்களே பங்கேற்றனர்.

வேலூர், 

சத்துவாச்சாரியில் நடந்த கொரோனா பரிசோதனை முகாமில் குறைந்த நபர்களே பங்கேற்றனர். முகாம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் சரியாக தகவல் தெரிவிக்கவில்லை என்று மாவட்ட வழங்கல் அலுவலர் கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா பரிசோதனை முகாம்

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக காய்ச்சல், சளி, இருமல், உள்ளிட்ட அறிகுறி காணப்படும் பரிசோதனை செய்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் ஒரு நாளைக்கு 10 வார்டுகள் வீதம் 6 நாட்கள் 60 வார்டுகளிலும் நேற்று முதல் பரிசோதனை முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் நாளான நேற்று வேலூர் சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி, தொரப்பாடி, கஸ்பா, அலமேலுமங்காபுரம், தாராபடவேடு, கொணவட்டம் உள்பட 10 வார்டுகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இதில், அரசு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி காணப்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த முகாமை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

சரியாக தகவல் தெரிவிக்கவில்லை

அதன்படி சத்துவாச்சாரி பகுதி 5-ல் நடைபெற்ற முகாமை மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய முகாமில் 3.30 மணி வரை மிகவும் குறைந்த அளவு பொதுமக்களே வந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து அவர் அந்த பகுதி மக்களிடம் விசாரித்தார். அப்போது முகாம் குறித்த தகவல் தெரியவில்லை என்று பலர் தெரிவித்தனர்.

அதனால் அதிருப்தி அடைந்த மாவட்ட வழங்கல் அலுவலர் அங்கிருந்த மாநகராட்சி ஊழியர்களிடம் முகாம் குறித்து ஆட்டோவில் ஒலிபெருக்கி அல்லது தண்டோரோ போட்டு ஏன் விழிப்புணர்வு செய்யவில்லை என்று கண்டித்தார்.

மேலும் சத்துவாச்சாரியில் பகுதியில் முகாம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிவித்து பொதுமக்களை அழைத்து வரும்படி அவர் தெரிவித்தார். இந்த சம்பவம் முகாமில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story