ஏ.கே.படவேடு, கண்ணமங்கலத்தில் 4 பேருக்கு கொரோனா 3 நாட்களுக்கு கடைகள் மூடல்
கண்ணமங்கலத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஏ.கே.படவேட்டில் 3 நாட்களுக்கு கடைகள் மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கண்ணமங்கலம்,
ஏ.கே.படவேடு, கண்ணமங்கலத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் ஏ.கே.படவேட்டில் 3 நாட்களுக்கு கடைகள் மூட வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
3 பேருக்கு கொரோனா
கண்ணமங்கலத்தை அடுத்த ஏ.கே.படவேடு ரேணுகொண்டாபுரம் பகுதியில் வசிக்கும் சாலை பணியாளர் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் தாயாருக்கும், 37 வயது ஆட்டோ டிரைவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து ஆட்டோ டிரைவர் குடும்பத்தினர் உள்பட 12 பேர் கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஏ.கே.படவேடு பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக, நேற்று முதல் நாளை (புதன்கிழமை) வரை 3 நாட்கள் அனைத்து கடைகளும் மூடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதன்படி, ஏ.கே.படவேடு பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடியது. மேலும் படவேட்டுக்கு செல்லும் அனந்தபுரம் சாலை முழுவதும் கற்கள், முட்செடிகள் வைத்து தடை செய்யப்பட்டுள்ளது.
முதியவருக்கு தொற்று
கண்ணமங்கலம் அருகே உள்ள வேலூர் தாலுகாவை சேர்ந்த கம்மவான்பேட்டை கிராமத்தில் 82 வயது முதியவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story