கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் நகரில் மாலை 6 மணிக்கு கடைகள் அடைப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் நகரில் மாலை 6 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டன.
விழுப்புரம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் விழுப்புரம் நகரில் மாலை 6 மணியுடன் கடைகள் அடைக்கப்பட்டன.
கொரோனா பரவல் அதிகரிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் இந்நோய் பற்றிய அச்சம் இல்லாமல் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்கிறோம் என்ற பெயரில் எப்போதும்போல் கூட்டம், கூட்டமாக சென்று முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். இதனால் நோய் பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் விழுப்புரம் நகரில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைக்க அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் முடிவு செய்தனர்.
கடைகள் அடைப்பு
அதன்படி நேற்று முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்பட்டன. மளிகை கடைகள், டீக்கடைகள், பெட்டிக்கடைகள், எலக்ட்ரானிக் கடைகள், நகைக்கடைகள், துணிக்கடைகள் என அனைத்து கடைகளும் மாலை 6 மணியுடன் மூடப்பட்டன.
ஆனால் மருந்து கடைகள் மட்டும் எப்போதும்போல் இரவு வரை திறந்திருந்தன. அதுபோல் ஓட்டல்களில் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக இரவு வரை பார்சல் சாப்பாடு வழங்கப்பட்டது.
போலீசார் கண்காணிப்பு
இந்நிலையில் நேற்று மாலை விழுப்புரம் நகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதா? என கண்காணித்தனர். அப்போது சில கடைகள் திறந்திருந்ததை பார்த்த போலீசார், உடனடியாக அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுத்தனர்.
மாலை 6 மணிக்கு பிறகு நகரில் அனைத்து கடைகளுமே அடைக்கப்பட்டிருந்ததால் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்பட்டது. நகரின் முக்கிய சாலைகளான விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி சாலை, கே.கே.சாலை, எம்.ஜி. சாலை, திரு.வி.க. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story