தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி


தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலி
x
தினத்தந்தி 14 July 2020 6:08 AM IST (Updated: 14 July 2020 6:08 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். செவிலியர்கள் உள்பட 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தேனி,

தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்து இருந்தனர்.

இந்நிலையில் மேலும் 3 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அதில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பூதிப்புரத்தை சேர்ந்த 58 வயது பெண், கம்பத்தை சேர்ந்த 85 வயது முதியவர், கொடைக்கானல் அண்ணாநகரை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோர் காய்ச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தனர்.

இதில், பூதிப்புரத்தை சேர்ந்த பெண் கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே நேற்று முன்தினம் உயிரிழந்து விட்டார். நேற்று பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,729 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 3 செவிலியர்கள், உத்தமபாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெரியகுளத்தை சேர்ந்த 32 வயது கைதி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 7 பேர் உள்பட பெரியகுளம் பகுதியில் 20 பேருக்கும், போடியில் 72 வயது முதியவர் உள்பட 10 பேருக்கும், உத்தமபாளையத்தில் 2 பேருக்கும், கம்பத்தில் 92 வயது மூதாட்டி, 12 வயது சிறுவன் உள்பட 19 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

கூடலூரில் தி.க. நிர்வாகி, 7 சிறுமி, சிறுமியின் தாய், 10 மாத ஆண் குழந்தை, குழந்தையின் தாய் உள்பட 15 பேருக்கும், தேனியில் 6 மாத பெண் குழந்தை, தம்பதி உள்பட 30 பேருக்கும், பழனிசெட்டிபட்டியில் ஆசிரியர் உள்பட 2 பேருக்கும், அரண்மனைப்புதூர், வீரபாண்டி ஆகிய ஊர்களில் தலா 2 பேருக்கும், அய்யனார்புரம், வீரபாண்டி, தாடிச்சேரி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும். கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

பூதிப்புரத்தில் 15 வயது சிறுவன் உள்பட 10 பேருக்கும், சின்னமனூரில் 4 பேருக்கும், ஆண்டிப்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர் உள்பட 6 பேருக்கும், வருசநாடு, கருநாக்கமுத்தன்பட்டி, ராயப்பன்பட்டி, மேல்மங்கலம், ஜல்லிப்பட்டி ஆகிய ஊர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,863 ஆக அதிகரித்துள்ளது.

Next Story