ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்து காட்சியளிக்கும் கிருஷ்ணாநதி கால்வாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்து காட்சியளிக்கும் கிருஷ்ணாநதி கால்வாய் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 14 July 2020 6:53 AM IST (Updated: 14 July 2020 6:53 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்து காணப்படும் கிருஷ்ணா நதி நீர் கால்வாயை பருவமழை தொடங்கும் முன்னர் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மற்றும் ஆந்திர முதல்-மந்திரி என்.டி. ராமாராவ் ஆகியோர் இடையே 1982-ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. ஆந்திராவில் 152 கிலோ மீட்டரும், தமிழகத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்துக்கும் கால்வாய் கட்டப்பட்டது. 1983-ம் ஆண்டு கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, 1995-ம் ஆண்டில் முடிக்கப்பட்டன.

1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் 8.040 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 811 கனஅடி தண்ணீர் பாய்ந்து வந்ததால் தமிழக எல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிருஷ்ணா நதி கால்வாயில் கரைகள் சேதமடைந்தன.

அதிலும் குறிப்பாக ஜங்காலபள்ளி, தொம்பரம்பேடு, அம்பேத்கர்நகர், சிற்றப்பாக்கம், அனந்தேரி, போந்தவாகம், கரகம்பாக்கம், மயிலாப்பூர், தேவந்தவாக்கம் பகுதிகளில் கால்வாய் கரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. அடுத்த மாதம் பருவ மழை சீசன் தொடங்கும் நிலையில், மழை நீர் கிருஷ்ணா நதி கால்வாயில் பெருக்கெடுத்து ஓடும். இதன் காரணமாக கரைகள் மேலும் சேதமடைய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

எனவே பருவமழை காலத்துக்குள் சேதமடைந்த கிருஷ்ணா நதி கால்வாய் கரைகளை தமிழக அரசு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story