முக கவசம், சமூக இடைவெளி இல்லை: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கூட்டமாக நின்ற பொதுமக்கள் கொரோனா பரவும் அபாயத்தை உணர்வது எப்போது?


முக கவசம், சமூக இடைவெளி இல்லை: ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க கூட்டமாக நின்ற பொதுமக்கள் கொரோனா பரவும் அபாயத்தை உணர்வது எப்போது?
x
தினத்தந்தி 14 July 2020 10:36 AM IST (Updated: 14 July 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு அறிவித்தபடி இந்த மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதனக்கோட்டை,

ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணபதிபுரத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தமிழக அரசு அறிவித்தபடி இந்த மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மன் கோவில் தெரு, நடுத்தெரு, ஆதிதிராவிடர் காலனி, ஒசுவபட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்கள், அந்த ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தனர். இதனால் அந்த கடை முன்பு ஏராளமானவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் முண்டியடித்து கொண்டு நின்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்தே, பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல், ஊரடங்கால் பலர் வேலை, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை உள்ளது. கொரோனா பரவல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டாலே, பழைய இயல்பு நிலை திரும்பும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதும், அரசு அறிவித்துள்ள விதிமுறைகளில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்ற முக்கியமானவற்றை பொதுமக்களில் பலர் கடைப்பிடிப்பதில்லை. இதனால் கொரோனா வேகமாக பரவும் அபாய நிலை உள்ளது என்பதை பொதுமக்கள் எப்போதுதான் உணரப்போகிறார்களோ? தெரியவில்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது சாத்தியமற்றது. எனவே அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும், என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story