போலீஸ் வேலைக்கு தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் பணி; கலெக்டரிடம் வலியுறுத்தல்


போலீஸ் வேலைக்கு தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் பணி; கலெக்டரிடம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 July 2020 12:25 PM IST (Updated: 14 July 2020 12:25 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் வேலைக்கு தகுதி பெற்று மதிப்பெண் அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரி தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்

தஞ்சாவூர்,

.தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு 20-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கலெக்டர் கோவிந்தராவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 2-ம் நிலை போலீசாருக்கான தேர்வில் மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றனர். இவர்களில் 8888 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ளவர்கள் எழுத்து தேர்வு, உடல்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பிலும் தேர்ச்சி பெற்று மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பின்தங்கியவர்கள் தான். தோல்வி அடைந்தவர்கள் அல்ல.

எனவே கொரோனா காலக்கட்டம் என்பதால் ஏற்கனவே தகுதி பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். நாங்கள் தேர்வு செய்யப்பட்டால் 6 மாதம் எந்தவித சம்பளமும் வழங்க வேண்டாம்.

பேராவூரணி வட்டார சி.ஐ.டி.யூ. மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பேராவூரணி தாலுகா ஊமத்தநாடு ஊராட்சி பெத்தனாட்சிவயல் அம்புலி ஆறு, பட்டுக்கோட்டை தாலுகா குறிச்சி பூங்கா அக்கினி ஆறு ஆகிய இரு இடங்களில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் சென்று, மணல் எடுத்து பிழைப்பு நடத்த, அனுமதி வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டி மணல் குவாரி அமைத்து தரவேண்டும்.

ஒரத்தநாடு அருகே உள்ள வன்னிப்பட்டு கிராம மக்கள் சார்பில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார் தலைமையில் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்லணை கால்வாய் அருமுளை வாய்க்காலில், கட்டுமான பணிகளை காரணம் காட்டி இதுவரை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மெயின் வாய்க்கால் பாசன பகுதியான 5 ஆயிரத்து 20 ஏக்கரில், அருமுளை வாய்க்கால் பாசன பகுதியான 4379 ஏக்கர் தற்போது விவசாயத்திற்கு தயாராக இருந்தும் தரிசாக கிடைக்கிறது. பல பகுதிகளில் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்காரவி தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பூதலூர் தாலுகா மாரனேரி கிராமத்தில் அய்யனார் ஏரி 30.705 எக்டேர் பரப்பளவில் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த ஏரியில் ஒரு சமூகத்தினர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார்கள். ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த நாங்கள் அரசால் அளந்து விடப்பட்ட இடத்தில் விவசாயம் செய்து வந்த போது எங்களுக்கு இடையூறு செய்கிறார்கள். எனவே விவசாயம் செய்ய எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவன தலைவர் பழ.சந்தோஷ்குமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளம் வாயிலாக தொடர்ந்து இந்து தெய்வங்களை ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. இது இந்துக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிறது. எனவே கருப்பர் கூட்டம் என்ற வலைதள சேனலை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story