சேலத்தில் ரூ.33 கோடியில் கட்டப்பட்ட கந்தம்பட்டி புதிய மேம்பாலத்தை நாளை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் அ.தி.மு.க.வினர் பங்கேற்க ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வேண்டுகோள்


சேலத்தில் ரூ.33 கோடியில் கட்டப்பட்ட கந்தம்பட்டி புதிய மேம்பாலத்தை நாளை முதல்-அமைச்சர் திறந்து வைக்கிறார் அ.தி.மு.க.வினர் பங்கேற்க ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 July 2020 2:03 PM IST (Updated: 14 July 2020 2:03 PM IST)
t-max-icont-min-icon

சேலம் கந்தம்பட்டியில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை நாளை (புதன்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். விழாவில் அ.தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்க வேண்டும் என மாநகர செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்,

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கந்தம்பட்டியில் இருந்து சிவதாபுரம் வழியாக இளம்பிள்ளை செல்லும் வாகனங்கள் மற்றும் அங்கிருந்து செவ்வாய்பேட்டைக்கு வரும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடியில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் திறப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். முன்னதாக நாளை காலை சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கிருஷ்ணகிரிக்கு முதல்-அமைச்சர் வருகிறார். பின்னர் அவர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு புறப்பட்டு வரும் அவர் சேலம் கந்தம்பட்டியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். இதுகுறித்து சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கந்தம்பட்டி பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனால் அங்கு புதிய மேம்பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களின் கோரிக்கையை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

அதற்கு அவரும் உடனடியாக பரிசீலனை செய்து புதிய மேம்பாலம் கட்ட ரூ.33 கோடியை ஒதுக்கீடு செய்தார். மேம்பால பணிகள் விரைவாக முடிவடைந்து தற்போது திறப்பு விழா நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு சேலம் கந்தம்பட்டி பைபாசில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

இதன்மூலம் கந்தம்பட்டி, சிவதாபுரம், இளம்பிள்ளை, பனங்காடு சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. எனவே புதிய மேம்பாலம் திறப்பு விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சரை சிறப்பான முறையில் வரவேற்பதுடன், விழாவில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கத்தலைவர்கள், இயக்குனர்கள் உள்பட பொதுமக்கள், அ.தி.மு.க.வினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story