போலீஸ்காரர்களை கண்டித்து ஐ.ஜி. அலுவலகம் முன் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி
போலீஸ்காரர்களை கண்டித்து ஐ.ஜி. அலுவலகம் முன் கணவன்-மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
திருக்கனூர் செட்டிப்பட்டை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மனைவி பிரமிளா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வாசு தேவன் நண்பர் வீரமுத்து. இவர் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாசுதேவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீரமுத்து கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. அவர் நடத்தும் ஏலச்சீட்டிலும் வாசுதேவன் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் வீரமுத்து தன்னிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய், அதற்கான வட்டி, சீட்டு பணம் என சேர்த்து ரூ.9 லட்சமாக உள்ளது. அந்த பணத்தை உடனடியாக தராவிட்டால் போலீஸ் மூலம் நடவடிக்கை எடுப்பேன் என்று வாசுதேவனை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனக்கு சொந்தமான நிலத்தை வீரமுத்துவிடம் அடமானம் வைத்துள்ளார். இந்த நிலையில் அந்த நிலத்தை வீரமுத்து மற்றொரு போலீஸ்காரர் கதிரேசன் என்பவரிடம் விற்க முயன்றதாக தெரிகிறது. இதனை அறிந்த வாசுதேவன் தனது மனைவி பிரமிளாவுடன் சென்று கதிரேசனிடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் அதையெல்லாம் கேட்காததுடன் கணவன்-மனைவியை கதிரேசன் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்த போது திருக்கனூர் போலீசார் அதை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த வாசுதேவனும், பிரமிளாவும் நேற்று காலை கடற்கரை சாலையில் உள்ள போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்தனர்.
அங்கு அவர்கள் போலீஸ்காரர்கள் வீரமுத்து, கதிரேசன் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். அப்போது திடீரென தனது பையில் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவிடம் அழைத்துச் சென்றனர். அவரிடம், 2 போலீஸ்காரர்கள் தங்களை மிரட்டுவதை புகாராக தெரிவித்தனர். இதனையடுத்து ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதனை தொடர்பு கொண்டு இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
போலீஸ்காரர்கள் மீது புகார் தெரிவித்து தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story