தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய புதிய நடைமுறை; கலெக்டர் அறிவிப்பு


தொழில் நிறுவனங்கள் பதிவு செய்ய புதிய நடைமுறை; கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 15 July 2020 4:31 AM IST (Updated: 15 July 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்ய புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பதிவுக்காக புதிய நடைமுறையான உதயம் பதிவு என்ற பெயரில் கடந்த 1-ந் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தொழில் நிறுவனங்களின் பதிவு நடைமுறை முழுவதும் ஆன்லைனில் எந்தவித கட்டணமும் இல்லாமல் சுய உத்தரவாதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. தொழில் நிறுவனத்தை பதிவு செய்ய எந்த ஒரு ஆவணத்தையோ, ஆதாரத்தையோ பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை. பதிவு நடைமுறை அனைத்தும் இலவசம். பதிவு செய்வதற்கு ஆதார் எண் தேவை.

பதிவு செய்த பின் உதயம் பதிவு சான்றிதழ் www.udyamregistration.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கட்டணம் வசூலித்து உதயம் சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறும் தனியார் இணையதளங்களை நம்ப வேண்டாம். இந்த சான்றிதழில் உள்ள டைனமிக் கியூ ஆர் கோட் மூலமாக தொழிற்சாலை குறித்த விவரங்களை பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். பதிவை புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை.

இந்த ஆன்லைன் வழிமுறையானது வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி.ஐ.என். அமைப்புகளுடன் முழுவதுமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் ஆண்டு விற்பனை குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட அரசு தரவுத்தொகுப்பில் இருந்து தானாக எடுத்துக்கொள்ளப்படும்.

எந்த ஒரு தொழில் நிறுவனமும் ஒரு உதயம் பதிவுக்கு மேல் பதிவு செய்யக்கூடாது. ஆனால் உற்பத்தி மற்றும் சேவை அல்லது இரண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை சேர்த்துக்கொள்ளலாம். பதிவுநடைமுறை மிக எளிதாகவும், சிரமம் இல்லாமலும் இருப்பதால் தொழில் முனைவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஏற்கனவே தொழில் முனைவோர் ஒப்புகை பதிவு-2 அல்லது உத்யோக் ஆதார் பதிவு ஆகிய பழைய முறைகளில் பதிவு செய்த நிறுவனங்கள் கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் உதயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மாவட்ட தொழில் மையத்தில் ஒற்றைசாளர அமைப்பு நடைமுறையின் மூலமாக தேவையான உதவிகள் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உதயம் பதிவு இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் கூறியுள்ளார். 

Next Story