இன்று கடைசி நாள்: மின் கட்டண மையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
மின் கட்டணம் செலுத்த இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள மின் கட்டண மையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில் மின் கட்டண மையங்களும் மூடப்பட்டிருந்தன.
அந்த வகையில் கடந்த மாதம் 19-ந்தேதி முதல் கடந்த 5-ந்தேதி வரை மின் கட்டண மையங்கள் செயல்படவில்லை. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் நலன் கருதி ஜூலை 15-ந்தேதி (இன்று) வரை மின் கட்டணம் செலுத்திக் கொள்ளலாம் என மின் வாரியம் அறிவித்திருந்தது. இதில் கடந்த 11-ந்தேதியும் (2-வது சனிக்கிழமை), 12-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை) மின் கட்டண மையங்கள் செயல்படவில்லை.
பொதுவாகவே ஆன்லைன் வசதி இல்லாமை உள்பட காரணங்களால் 70 சதவீதத்திற்கும் மேலான மக்கள் மின்கட்டண மையங்களிலேயே கட்டணத்தை செலுத்துகிறார்கள். மீதமுள்ளவர்கள் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக மின் கட்டண மையங்களில் மக்கள் கூட்டம் இருந்து வந்தது. ஆனாலும் சில மின் கட்டண மையங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றே சொல்லலாம். சமூக இடைவெளியை கருத்தில் கொள்ளாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக நிற்பதை பார்க்க முடிந்தது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இந்த நிலை காணப்பட்டது. கட்டணம் செலுத்த வருவோரின் கைகளில் கிருமிநாசினி கூட தெளிக்கப்படவில்லை.
மக்கள் கூட்டம்
இந்த நிலையில் மின் கட்டணம் செலுத்த இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்பதால் நேற்று மின் கட்டண மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு மின்கட்டண மையத்திலும் நீண்ட வரிசையில் பொது மக்கள் காத்திருந்தனர். பல இடங்களில் சமூக இடைவெளி கருத்தில் கொள்ளப்படவில்லை.
காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல மின் கட்டண மையங்களில் கூடுதலாக 30 நிமிடங்கள் கட்டணம் வசூலிப்பதற்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்படியிருந்தும் பெரும்பாலானோரால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.
கால அவகாசம் தேவை
இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த அவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், புதன்கிழமை கடைசி நாள் என்பதால் மின் கட்டண மையங்களில் நிச்சயம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு மின்கட்டண மையத்திலும் நீண்ட வரிசையில் காத்து இருக்கிறோம். ஆனால் பிற்பகலுக்கு மேல் அலுவலகம் மூடப்படுவதால், வரிசையில் பின்னால் நிற்பவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் போகிறது.
மின் கட்டணம் செலுத்தா விட்டால் அபராதம் கட்ட வேண்டியது இருக்கும். எனவே மின் கட்டணம் செலுத்துவதற்கு இந்த மாதம் இறுதி வரை கால அவகாசம் தந்தால் நன்றாக இருக்கும்‘, என்றனர். ஆன்லைனில் சில குளறுபடிகள் காரணமாக மின் கட்டணம் செலுத்த முடியாததால், அவர்களும் மின் கட்டண மையங்களில் குவிந்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story