சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வேன் டிரைவர்கள் நூதன போராட்டம்
சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வேன் டிரைவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வாடகை வேன் உரிமையாளர்கள், டிரைவர்கள் திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி, அங்கபிரதட்சணம் செய்து நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், கடந்த 4 மாதங்களாக சுற்றுலா வேன் இயக்கப்படவில்லை. ஆனால், காலாண்டு வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளோம். மேலும், இன்சூரன்ஸ், வாகன உரிமம் புதுப்பித்தல், மாத கடன் தவணை உள்ளிட்டவற்றை செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம்.
வேன்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தி 2 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால், தற்போது மீண்டும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தினால் தான் வாகன உரிமத்தை புதுப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வேன் இயக்க வேண்டுமானால் இ-பாஸ் தேவை உள்ளது. அதற்கு விண்ணப்பித்தாலும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் 7 பேருக்கு மேல் பயணம் செய்ய இயலாது. இதனால் நாங்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே, வேன்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். இல்லையென்றால், சாலை வரியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story