தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்த முதியவருக்கு கொரோனா: பரிசோதனை முடிவு வருவதற்குள் உடலை உறவினர்கள் தகனம் செய்ததால் பரபரப்பு


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்த முதியவருக்கு கொரோனா: பரிசோதனை முடிவு வருவதற்குள் உடலை உறவினர்கள் தகனம் செய்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 July 2020 4:00 AM IST (Updated: 15 July 2020 6:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் இறந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், பரிசோதனை முடிவு வருவதற்குள் அவரது உடலை உறவினர்கள் வாங்கி சென்று தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோன்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி யாரேனும் இறந்தாலும், அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்த பின்னரே உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான 81 வயது முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் காரணமாக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் முன்சிகிச்சை மையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனைக்காக மாதிரி சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து பரிசோதனை முடிவு வராமல் உடலை கொடுக்க ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், உறவினர்கள் விடாப்பிடியாக உடலை வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டனர். நேற்று காலையில் உடலை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

இந்த நிலையில் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் இறந்தவரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தி உள்ளனர். இந்த இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஊரடங்கை மீறி சுமார் 400 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இறந்த முதியவரின் பரிசோதனை முடிவு வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று ஒலிபெருக்கி மூலம், இறந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் அங்கு இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உடனடியாக இறுதிச்சடங்கை முடித்து, இறந்தவரின் உடலை உறவினர்கள் தூத்துக்குடி மையவாடிக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர். இதையடுத்து தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், மாநகர நல அலுவலர் அருண்குமார் மற்றும் அதிகாரிகள் மையவாடிக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்தவரின் உடலை உரிய சடங்குகளை செய்து உறவினர்கள் எரியூட்டினர்.

இதையடுத்து தூத்துக்குடி டூவிபுரம் பகுதியை நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்து பாதைகளை அடைத்தனர். அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

இறந்தவரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story