லாரி உரிமையாளர்கள்-டிரைவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
சாலை வரியை ரத்து செய்யக்கோரி நாகை மாவட்டத்தில் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் அனைத்து ஓட்டுனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அனைத்து ஓட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி வேன், பஸ் டிரைவர்கள், தனியார் பஸ் டிரைவர்கள், லாரி, ஆட்டோ டிரைவர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் சிக்கல், கீழ்வேளூரில் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிக்கலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். துணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்வேளூரில் மாவட்ட இணை செயலாளர் அனஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் கொள்ளிடம் அருகே அரசூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சீர்காழி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
இதில் சங்க கவுரவ தலைவர் செந்தில்குமார், செயலாளர் மனோகரன், பொருளாளர் உலகநாதன், துணை தலைவர் அமுதன் உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மேற்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் கொடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி லாரி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 150 லாரிகள் இயக்கப்படவில்லை. இதனால் எருக்கூர் நவீன அரிசி ஆலைக்கு லாரிகள் மூலம் நெல்மூட்டைகள் ஏற்றி செல்லும் பணி பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story