திருவண்ணாமலை, ஆரணியில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் - கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
திருவண்ணாமலை, ஆரணியில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு சங்க நிர்வாகிகள் தலைமை தாங்கி, கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ஊரடங்கு காலங்களில் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு காலத்தில் வேலை இல்லாமல் தவிக்கும் ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். பேரிடர் காலங்களில் உரிமையாளர்களுக்கு காப்பீடு நிறுவனத்திடம் இருந்து பேரிடர் நிதியை பெற்றுத்தர அரசு முன்வர வேண்டும். இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். பழைய வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்வதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல ஆரணி வட்டார கார், வேன் ஓட்டுனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆரணி-வேலூர் ரோட்டில் சேவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கார், வேன் ஓட்டுனர்கள் சங்கத்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகேசன், ஆரணி பொறுப்பாளர் சனவுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் கருணாநிதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவையின் நிறுவனர் ஆரணி சி.குணசேகரன் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story