வேலூரில், தக்காளி வரத்து குறைவால் விலை ‘கிடு, கிடு’ உயர்வு - கிலோ ரூ.60-க்கு விற்பனை
வேலூரில் தக்காளி வரத்து குறைவால் விலை ‘கிடு கிடு’வென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர்,
வேலூர் மாநகரின் முக்கிய காய்கறி, பழ வியாபார மையமான நேதாஜி மார்க்கெட் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டன. அதைத்தொடர்ந்து அங்கிருந்த மொத்த விற்பனை காய்கறி கடைகள் மாங்காய் மண்டி அருகேயும், சில்லரை விற்பனை காய்கறி கடைகள் வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்திலும் தற்காலிகமாக இயங்கி வருகின்றன.
மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் வருகின்றன. கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு மிகக்குறைந்த அளவே தக்காளி லாரிகள் வருகின்றன. அதனால் அதன் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. அதன் காரணமாக சில்லரை விற்பனை காய்கறி கடைகள், மளிகை கடைகளில் கடந்த ஒருமாதமாக தக்காளி கிலோ ரூ.40-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அதன் விலை மேலும் அதிகமாகி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. அதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து நேதாஜி மார்க்கெட் காய்கனி வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.பாலு கூறுகையில், வேலூர் மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த மாதம் ஆந்திராவில் இருந்து தினமும் 15 லாரிகளில் தக்காளிகள் வந்தன. தற்போது 5 லாரிகளில் வருகின்றன. ஆந்திராவில் பெய்யும் மழை காரணமாக மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. 25 கிலோ அடங்கிய ஒரு பாக்ஸ் முன்பு ரூ.300 முதல் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ரூ.800 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகின்றன. அதனால் தக்காளி விலை அதிகமாகி உள்ளது. இங்கிருந்து தக்காளி வாங்கி செல்லும் சில்லரை காய்கறி, மளிகை கடை வியாபாரிகள் கூடுதலாக 10 ரூபாய் சேர்த்து ரூ.50 முதல் ரூ.60 வரை அதனை விற்பனை செய்கிறார்கள். மற்ற காய்கறிகளின் விலை உயரவில்லை.
தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் அதிகளவு காய்கறிகளை சேமித்து வைக்க தேவையான வசதிகள் இல்லை. தக்காளிகள் மழையில் நனைந்தால் கெட்டுபோகும் என்பதால் வியாபாரிகள் அதிகளவு சேமித்து வைப்பதில்லை என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story