முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை ஏற்பாடுகள் தீவிரம்


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகை ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 15 July 2020 2:18 AM GMT (Updated: 15 July 2020 2:18 AM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வருகையையொட்டி வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து உள்ளன.

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஈரோடு வருகிறார். மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார். அந்த ஆய்வுக்கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது. மேலும், பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ள முதல்-அமைச்சர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

இதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அங்கு மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஈரோடு பெருந்துறைரோடு பகுதியில் தூய்மைப்பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. ஈரோடு வரும் முதல்-அமைச்சர் அன்றைய தினம் காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்க இருப்பதாக திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே காலிங்கராயன் இல்லம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தூய்மைப்பணி நேற்று நடந்தது. ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் வளர்ந்து உள்ள புல்செடிகள் அகற்றப்பட்டு, தடுப்புச்சுவரில் வெள்ளை பெயிண்ட் அடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இதுபோல் முதல்-அமைச்சர் வருகையையொட்டி அனைத்து துறை அதிகாரிகளும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

Next Story