ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 July 2020 8:18 AM IST (Updated: 15 July 2020 8:18 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தால் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

கொரோனா தடுப்பு மற்றும் சேவை பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து அரசு துறைகளில் பணியை மேற்கொள்ளும் போது இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆஸ்ரா கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் உயிரை பணயம் வைத்து வைரஸ் தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். பொது முடக்க காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லும் வகையில் அரசு ஊழியர்களுக்காக தனியாக பஸ் வசதிகள், பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய ஏற்ற முறையிலாக நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.

இது குறித்து மாவட்ட தலைவர் முத்துகுமார் கூறியதாவது:-

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள், வழக்குகள், குற்ற குறிப்பாணைகள், தற்காலிக பணிநீக்கம், பணியிட மாறுதல் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். புதிய வேலை நியமன தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் பயனளிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

சரண் விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம், விடுப்பு கால பயண சலுகை ரத்து, ஓராண்டு கால பணி ஓய்வு மறுப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். அரசுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.

Next Story