ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப வந்தது அபராதத்துடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தால் பொதுமக்கள் அவதி


ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப வந்தது அபராதத்துடன் செலுத்த வேண்டிய கட்டாயத்தால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 July 2020 11:39 AM IST (Updated: 15 July 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் பகுதியில் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தியவர்களுக்கு பணம் திரும்ப வந்ததால் அவர்கள் அபராதத்துடன் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி, மண்டபம், பனைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெரும்பாலானோர் ஆன்லைன் வசதியை பயன்படுத்தி மின் கட்டணம் செலுத்தி வந்தனர். இவ்வாறு கட்டணம் செலுத்திய 200-க்கும் மேற்பட்டோருக்கு அவர்கள் செலுத்திய பணம் மீண்டும் அவர்களது வங்கி கணக்கிற்கே திரும்பி விட்டது. இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணம் செலுத்தவில்லை எனஅபராதத்துடன் மின் கட்டணத்தை செலுத்தும்படி மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அழகன்குளம் பகுதியை சேர்ந்த முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளர் பகுருல் அமீன் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 4-ந்தேதி மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தினேன். ஆனால் அந்த பணம் சில நாட்களில் மீண்டும் எனது வங்கி கணக்கிற்கே திரும்பி விட்டது. மின் கட்டணம் செலுத்திய விவரத்தை கூறியும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வேறு வழியின்றி அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்வாரிய அலுவலகத்தில் உள்ள குறைபாடுகளை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல சித்தார்கோட்டை அருகே உள்ள குலசேகரக்கால் கிராமத்தை சேர்ந்த செல்லையா என்பவர் கூறும்போது, கடந்த காலங்களில் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தான் மின் கட்டணம் செலுத்தி வந்தோம். தற்போது ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும்படி அரசு அறிவித்ததை தொடர்ந்து சித்தார்கோட்டையில் உள்ள தனியார் இன்டெர்நெட் மையத்திற்கு மின் கட்டணம் செலுத்த சென்றேன். அவர்கள் எனது மின் இணைப்பு எண்ணிற்கு கட்டணம் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்து விட்டனர். அதனை தொடர்ந்து பனைக்குளம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று விசாரித்து விட்டு மின் கட்டணம் செலுத்தி வந்தேன். மின்கட்டணம் கணக்கீடு செய்வதில் அடிக்கடி இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா தொற்று தீவிரமாக உள்ள நிலையில் மக்களின் அவதியை போக்க மின்வாரிய அதிகாரிகள் இத்தகைய குறைபாடுகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story