சேலத்தில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது


சேலத்தில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 15 July 2020 1:43 PM IST (Updated: 15 July 2020 1:43 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் மாவட்டத்தில் உள்ள பிற அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த 16 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 101 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 பேர், எடப்பாடி, அயோத்தியாப்பட்டணம் ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், சங்ககிரி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், மகுடஞ்சாவடி, வாழப்பாடி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 2 பேர், தலைவாசலில் 10 பேர், நங்கவள்ளி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது. அதாவது மொத்தம் 2 ஆயிரத்து 26 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 17 பேர் குணமடைந்ததால், நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story