ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்: புதுவை முதல்-அமைச்சரின் காரை மறித்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகை - போலீஸ் தடியடி; பரபரப்பு


ஊதிய உயர்வு கேட்டு போராட்டம்: புதுவை முதல்-அமைச்சரின் காரை மறித்து பொதுப்பணித்துறை ஊழியர்கள் முற்றுகை - போலீஸ் தடியடி; பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2020 3:30 AM IST (Updated: 16 July 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

ஊதிய உயர்வு கேட்டு முதல்-அமைச்சரின் காரை வழிமறித்து பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சியில் பொதுப்பணித்துறையில் 1,311 பேர் வவுச்சர் ஊழியர்களாக பணியில் அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு மாதம் 16 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டது. இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.200 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அவர்கள் பணிநிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சோனாம்பாளையத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகும் வவுச்சர் ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையில் உருளையன்பேட்டை சுதேசி மில் வளாகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை வைப்பதற்காக பொதுப்பணித்துறை அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் வவுச்சர் ஊழியர்கள் வந்தனர்.

ஆனால் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா காரணமாக 2 பேர் மட்டும் முதல்-அமைச்சரை சந்திக்குமாறு தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த அவர்கள் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அப்போது விழா முடிந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். இதைப்பார்த்ததும் வவுச்சர் ஊழியர்கள் அவர்களது கார்களை நோக்கிச் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்தனர். அதை மீறிச் சென்று முதல்-அமைச்சரின் காரை வழிமறித்து முற்றுகையிட்டதுடன் காரின் முன் படுத்து வவுச்சர் ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதன்பின் முதல்-அமைச்சர், அமைச்சர் நமச்சிவாயம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

முதல்-அமைச்சரின் காரை மறித்து பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்கள் திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதும், தடியடி நடந்ததும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story