தந்தை-மகன் கொலை வழக்கு: மாநில மனித உரிமை ஆணையம் அரசு டாக்டர்களிடம் விசாரணை - கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டும் ஆஜர்


தந்தை-மகன் கொலை வழக்கு: மாநில மனித உரிமை ஆணையம் அரசு டாக்டர்களிடம் விசாரணை - கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டும் ஆஜர்
x
தினத்தந்தி 16 July 2020 4:30 AM IST (Updated: 15 July 2020 11:27 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக அரசு டாக்டர்களிடம் மாநில மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு நேற்று விசாரணை நடத்தினார். இதில் கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டும் ஆஜர் ஆனார்.

தூத்துக்குடி, 

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

அதன்படி மாநில மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு குமார் நேற்று முன்தினம் சாத்தான்குளத்துக்கு வந்தார். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், கடைக்காரர்கள், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீஸ் ஏட்டு ரேவதி உள்பட 15 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தார்.

இந்த நிலையில் மனித உரிமை ஆணைய துணை சூப்பிரண்டு குமார் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரணையை தொடங்கினார்.

விசாரணைக்கு தற்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், கோவில்பட்டி கிளைச்சிறை சூப்பிரண்டு சங்கர், சாத்தான்குளம் அரசு டாக்டர் வெண்ணிலா, கோவில்பட்டி அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ், போலீஸ்காரர் சந்தனகுமார் ஆகியோர் ஆஜராகினர். அவர்களிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தார்.

பின்னர் துணை சூப்பிரண்டு குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

சாத்தான்குளம் வியாபாரிகள் இறந்த சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவின் அறிக்கைகள் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரி சுனில் குமார் ஆகியோரிடம் ஒப்படைக்கப்படும். இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறல் இருப்பது தெரியவந்தால் நிச்சயமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இன்று (வியாழக்கிழமை) மதுரை ஜெயிலுக்கு சென்று சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story