மராத்தா இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 27-ந் தேதி முதல் தினசரி விசாரணை


மராத்தா இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 27-ந் தேதி முதல் தினசரி விசாரணை
x
தினத்தந்தி 16 July 2020 3:45 AM IST (Updated: 16 July 2020 5:13 AM IST)
t-max-icont-min-icon

மராத்தா இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் 27-ந் தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டில் இறுதிக்கட்ட விசாரணை தினசரி நடக்கிறது.

மும்பை, 

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மராத்தா சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு உள்ள இடஒதுக்கீடு செல்லும் என்று கடந்த ஆண்டு ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

ஆனால் கல்வியில் 12 சதவீதமும், வேலைவாய்ப்பில் 13 சதவீதமும் மட்டும் வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.

இந்தநிலையில், மராத்தா இடஒதுக்கீடு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை வருகிற 27-ந் தேதி முதல் தினசரி வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு தெரிவித்து உள்ளது. மேலும் அதுவரை மராத்தா இடஒதுக்கீடு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உத்தரவு திருப்தி அளிப்பதாக காங்கிரசை சேர்ந்த மாநில மந்திரி அசோக் சவான் தெரிவித்தார்.

Next Story