குடியாத்தம் பகுதியில், முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை - கலெக்டர் தகவல்
குடியாத்தம் பகுதியில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் ஏதுமில்லை என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்,
குடியாத்தம் நகராட்சியிலும், கிராமப் புறங்களிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை, வேலூர் அரசு மருத்துவமனை, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் உள்ள ‘கோவிட் கேர்’ சென்டரில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதலாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் குடியாத்தம்-காட்பாடி சாலையில் ஒரு தனியார் கல்லூரியில் கோவிட் கேர் சென்டர் அமைக்க ஏற்பாடுகளை செய்தார். அங்கு, அனைத்துப் பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு 200 பேர் தங்க வைப்பதற்கான வசதிகள் உள்ளது.
அந்தப் பணிகளை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி கலெக்டர் ஷேமன்சூர், தாசில்தார்கள் வத்சலா, சரவணமுத்து, கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், கல்லூரி நிர்வாகி முருகவேல் மற்றும் பலர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
அப்போது கலெக்டர் சண்முகசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் மற்ற மாவட்டங்களை விட கொரோனா தொற்று பரிசோதனை அதிகளவில் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள், பொதுத்துறை அலுவலகம், தனியார் வங்கிகள், சிவில் சப்ளை அலுவலகம், போக்குவரத்துத்துறை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
அதில் வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், குடியாத்தம் மார்க்கெட்டில் ஏராளமானோருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் 1,200 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோய் தாக்கம் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவினால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. உடல் பாதிப்புகள் குறித்துப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். உடல் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக காத்திருக்காமல் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழப்புகள் தடுக்கப்படும்.
பொதுமக்கள் சிலர் பாதிப்பு இருந்தாலும் வெளியில் சொல்ல தயங்கி முற்றிய நிலையிலேயே உயிரிழக்க நேரிடுகிறது. அதைத் தவிர்க்கும் பொருட்டு பாதிப்பு அறிகுறி தெரிந்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அப்படி சென்றால் முற்றிலும் உயிரிழப்பு தடுக்கப்படும்.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தத்தில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 100-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். குடியாத்தம் நகரில் முழு ஊரடங்கை அமல் படுத்தும் திட்டம் ஏதுமில்லை. ஊரடங்கால் கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நிலையை தாண்டி நோய்த்தொற்று அதிகரித்து விட்டது. வியாபாரிகள் தாங்களாகவே விருப்பப்பட்டு கடைகளை அடைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story