கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்- அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது


கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம்- அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 15 July 2020 10:15 PM GMT (Updated: 2020-07-16T07:17:19+05:30)

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, உதவி கலெக்டர் (பயிற்சி) அமித்குமார், திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மந்தாகினி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறுகையில், ‘மாவட்டத்தில் தற்போது வரை 71 ஆயிரத்து 185 மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 67 ஆயிரத்து 436 முடிவுகள் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3,347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்களில் 2,234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட எல்லைகளில் 41 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறைகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள், 860 கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மூலம் சுகாதாரப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். நகரப்பகுதிகளில் மேற்கொள்வது போன்று கிராமப்புற பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் ராமச்சந்திரன் திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 11 வார்டுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Next Story