காஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா


காஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 July 2020 2:54 AM GMT (Updated: 2020-07-16T08:24:34+05:30)

காஞ்சீபுரம், கோவை மாவட்ட கலெக்டர்களுக்கு கொரோனா உறுதியானது.

காஞ்சீபுரம்,

சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்த அளவிலேயே பாதிப்பு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 163 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 4,255 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதியானதால் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவை மாவட்ட கலெக்டராக இருப்பவர் ராஜாமணி. இவருக்கு கடந்த 13-ந் தேதி இரவு லேசான தொண்டை வலி மற்றும் காய்ச்சல் இருந்தது. இதைத்தொடர்ந்து அவர் மறுநாள் காலை கோவை-அவினாசி சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சளி மாதிரிகளை கொடுத்தார். அவை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. அதன் முடிவுகள் நேற்று காலை வெளிவந்தது.

இதில் கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி நேற்றுக்காலை 9 மணியளவில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சைக்காக சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கலெக்டருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அவரது அறை கிருமி நாசினி கொண்டு தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. அதுபோன்று அவரது அறைக்கு செல்லும் வராண்டா முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கப்பட்டன. பின்னர் அவருடைய அறை மூடப்பட்டது.

Next Story