போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா உறுதி மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது


போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா உறுதி மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 16 July 2020 4:23 AM GMT (Updated: 16 July 2020 4:23 AM GMT)

கோவை மாவட்டத்தில் போலீசார் உள்பட 104 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து மதுக்கரை போலீஸ் நிலையம் மூடப்பட்டது.

கோவை,

கோவை மாவட்டம், மதுக்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீசாருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்த 2 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 ஆண் போலீசார் மற்றும் ஒரு பெண் போலீஸ் என 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 8 பேரும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதையடுத்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. இந்தநிலையில், மதுக்கரை சிறப்பு உதவியாளர் ஒருவர் தொண்டாமுத்தூரில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்தார். கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தொண்டாமுத்தூர் காவலர் குடியிருப்பு பகுதிக்கு சீல் வைத்து தடுப்பு வளையங்களை அமைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போத்தனூர், துடியலூர், சூலூர் போலீஸ் நிலையங்களை தொடர்ந்து மதுக்கரை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீசாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இ.எஸ்.ஐ. ஊழியர்கள்

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் ஊழியர்களான 32 வயது பெண், 23 வயது ஆண் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, அவினாசி சாலை பீளமேட்டில் இயங்கி வரும் ஓட்டல் பணியாளரான 25 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதுதவிர உருமாண்டம்பாளையம் பொன்விழா நகரை சேர்ந்த 58, 38, 28, பெண்கள், 15, 11 வயது சிறுமிகள், 38 வயது ஆண், ஹைவே காலனியை சேர்ந்த 52 வயது பெண், 21 வயது வாலிபர், சிவானந்தபுரத்தை சேர்ந்த 48 வயது ஆண், 40 வயது பெண், ஒண்டிப்புதூரை சேர்ந்த 70 வயது முதியவர், 41, 35 வயது ஆண்கள், அருள்கார்டனை சேர்ந்த 47 வயது பெண், 38 வயது ஆண், பீளமேட்டை சேர்ந்த 65 வயது முதியவர், 13 வயது சிறுவன், 16 வயது சிறுமி.

104 பேருக்கு பாதிப்பு

கரும்புக்கடையை சேர்ந்த 30 வயது பெண், 36 வயது ஆண், செல்வபுரம் சாமி அய்யர் வீதியை சேர்ந்த 9 பேர், முத்துசாமி காலனியை சேர்ந்த 13 பேர், சாரமேடு இலாஹி நகரை சேர்ந்த 8 பேர், உப்பார வீதியை சேர்ந்த 3 பேர், செட்டிவீதி நகைப்பட்டறை தொழிலாளர்கள் 3 பேர், சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்த 28 வயது பெண் உள்பட மாவட்டம் முழுவதும் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செல்வபுரம் பகுதியில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பெண்கள், 74 ஆண்கள் சேர்த்து 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,591-ஆக உயர்ந்து உள்ளது. 

Next Story