வங்கி அதிகாரி கொலை வழக்கு: தாய்-மகன்கள் உள்பட 4 பேர் கைது


வங்கி அதிகாரி கொலை வழக்கு: தாய்-மகன்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2020 1:02 PM IST (Updated: 16 July 2020 1:02 PM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே வங்கி அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்-மகன்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள உளுந்தங்குடியை சேர்ந்தவர் வண்ணமணி. இவருடைய மகன்கள் புகழேந்தி(வயது 36), கோவிந்தன்(35). புகழேந்தி திருச்சியில் உள்ள வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இடப்பிரச்சினை காரணமாக உளுந்தங்குடியை சேர்ந்த ரெயில்வே போலீஸ்காரர் ரெங்கராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில், வண்ணமணி, கோவிந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் பாச்சூர் பகுதியில் விவசாயம் செய்துவந்தனர். கடந்த 13-ந்தேதி உளுத்தங்குடியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு தனது நண்பர் சதீஷ்குமாருடன் புகழேந்தி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, முன்விரோதம் காரணமாக ரெங்கராஜின் தம்பி பால்ராஜின் மகன்களான பிரபு, பிரபாகர், துரை மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து புகழேந்தி வாகனத்தின் மீது காரை மோதினார்கள். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த புகழேந்தியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவத்தில் புகழேந்தியின் நண்பர் சதீஷ்குமார் படுகாயம் அடைந்தார். சதீஷ்குமார் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த கொலை சம்பந்தமாக மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜீயபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சமயபுரம் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், பால்ராஜின் மனைவி லட்சுமி(50), அவருடைய மகன்கள் பிரபு, பிரபாகர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் (29) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள், திருச்சி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள துரையை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story