மக்கள் நினைத்ததை விட அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


மக்கள் நினைத்ததை விட அதிக திட்டங்களை முதல்-அமைச்சர் நிறைவேற்றி உள்ளார் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 16 July 2020 10:45 PM GMT (Updated: 2020-07-16T22:33:12+05:30)

மக்கள் நினைத்ததை விட அதிகமான திட்டங்களை முதல்-அமைச்சர்எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு, 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஈரோடு வருகிறார். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறுகிறது.

இதற்கான பந்தல் அமைக்கும் பணி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு வந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சி என்பது ஈரோடு மாவட்ட மக்களுக்கு பெரும்பேறாக இருக்கிறது. காரணம், 60 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட முடியாத அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதல்-அமைச்சர் நிறைவேற்றி தந்து இருக்கிறார். இதுபோல் ஈரோடு மாநகராட்சி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ரூ.540 கோடியில் நிறைவேற்றுகிறார்.

மேலும் கொடிவேரி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 20 ஆண்டுகளில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தார்களோ, மக்கள் நினைத்ததைவிட அதிகமான திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி உள்ளார். ஈரோடு வரும் முதல்-அமைச்சர் நிறைவேற்றப்பட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Next Story